×

லேப்டாப் கொடுக்க மறுப்பு பேரையூர் அரசு பள்ளி முற்றுகை

பேரையூர், நவ.29: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று தமிழக அரசின் இலவச லேப்டாப் 2017-18ம் ஆண்டு மாணவிகளுக்கும், 2018-19ம் ஆண்டு மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2017-18ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் இலவச லேப்டாப் வழங்கவில்லையென சாலை மறியல் செய்தனர். இப்போதும் அதே ஆண்டில் படித்த மாணவிகளில் 12ம் வகுப்பு முடித்து வீட்டிலுள்ளவர்களுக்கும், மேற்கொண்டு படிக்க முடியாதவர்களுக்கும், லேப்டாப் வழங்க முடியாது என தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் கூறினார்.
இதனால் கல்லூரியில் பயிலாத முன்னாள் மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அதன் பின்பு எங்களுக்கு லேப்டாப் கொடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக் கூறினார்கள்.இதுகுறித்து முன்னாள் மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, எங்கள் பிள்ளைகளுக்கு லேப்டாப் வழங்க முடியாது என்கின்றனர். இந்த வருடம் படிக்க போதிய வசதியில்லாமல் நின்று, அடுத்த வருடம் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு இவர்கள் எப்படி லேப்டாப் வழங்குவார்கள். மேலும் நடப்பாண்டில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கியுள்ளனர். இதில் ஏதேனும் சில மாணவிகள் பெயிலாகி விட்டால் லேப்டாப்பை திரும்ப பெற முடியுமா?.

12ம் வகுப்பு படித்து முடித்த பின்பு அனைவரும் கல்லூரியில் படிக்கத்தான் போகிறார்கள் என்பது அரசுக்கு எப்படி தெரியும். எங்களை போன்ற ஏழை எளிய மாணவிகளை பழி வாங்கவும், இவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளி விடவும்தான் அரசு உத்தரவை வழங்கியுள்ளது. தற்போது எங்கள் பிள்ளைகள் முன்னாள் மாணவிகள், கல்லூரி பயில வழியில்லை என்றுதானே இந்த அரசு வஞ்சிக்கிறது. இதே மாணவிகள் ஓட்டுப் போடும்போது நீங்கள் கல்லூரியில் பயிலவில்லை உங்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறுவார்களா?.நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒன்றிணைத்து லேப்டாப் வழங்கும் வரை போராடுவோம். எங்கள் பிள்ளைகளை ஒதுக்கி வைத்து பழி வாங்கும் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்றனர்.பின்னர் பேரையூர் தாலுகா அலுவலகம் சென்று தாசில்தார் செந்தில்குமாரிடம், லேப்டாப் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

Tags :
× RELATED பெண் காவலருடன் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது